சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்
------------------------------------------------------------------

சுப்ரபாரதிமணியனின் கை வண்ணத்தில் இன்னுமோர் கதைவண்ணம் 'ஓலைக்கீற்று' எனும் ஒற்றை வரியைத் தாண்டி, இந்நூலிற்கு வேறெந்த அறிமுகமும் தேவையில்லைதான். தேனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். சாப்பிடும் விதங்களில்தான் ஆளுக்காள் மாறுபடுவர். சுவாரஸ்யத்துக்கோ, தகவலுக்கோ ஒருவர் ருசித்த விதத்தை ஒன்னொருவருக்குச் சொல்லுவது தேவையெனில் - 'ஓலைக்கீற்று'க்கான இவ்விமர்சனமும் தேவையானதே.


வெறும் கற்பனைச் சம்பவங்களிலும், விநோதப் புனைவு உத்திகளிலும் நம்பிக்கையில்லாத படைப்பாளியாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருப்பவர் ஆர்பிஎஸ் எனப்படும் சுப்ரபாரதிமணியன் அவர்கள் அவரது படைப்புகள் என்றுமே சமகால வாழ்வியலின் அவலங்களை வெகு அக்கறைரயோடு பேசுபவை. ஜிலுஜிலுப்பான வார்த்தை விளையாட்டுக்களையும், பொறுப்பற்ற சொல்லாடல்களையும் அவரது படைப்புகளில் காணவியலாது. கீழே நடக்கும் கலவரத்தை உயரமான கட்டிடத்தின் மீது வெகு பாதுகாப்பாக நிற்பவர் விவரிப்பதற்கும்- அதே கலவரத்தில் சிக்குண்டு சேதப்பட்டவர் அதை விவரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. இதில் ஆர்பிஎஸ் இரண்டாவது வகை.


அதனால்தான் கதை செய்வதற்காகப் போலியான வறட்டுப் பாணிகளில் யோசிப்பதில்லையவர். எக்கதையிலும் தான் புழங்கிக் கொண்டிருக்கும் மண்ணையும் மக்களையுமே பதிவு செய்கிறார். மண் என்றால் மண் சார்ந்த வளங்களும், மக்கள் என்றால் அவர்களின் சுகங்களும் அவரின் கதைப் பொருட்களாகின்றன. மண்ணும் மனிதமும் வளமாக இருத்தலே சமூக வெற்றி எனும் கோட்பாட்டில் நின்றுகொண்டு, அவற்றைச் சுரண்டும் சக்திகளை அடையாளப்படுத்தி ஆணி அடிக்கிறார்..'ஓலைக்கீற்று' தொகுப்பின் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு ஆணி குத்துகிறது.


ஆற்றைக் கெடுத்த ரசாயனக் கழிவுகள் உருவாக்கிய பூச்சிகள் 'ஈரம்' கதை முடிந்த பிறகும் நம்முள் ஊர்கின்றன. செத்த எலிகளாய் மனிதர்களைப் பந்தாடும் அப்பூச்சிகளின் அரக்கத் தனம் ஆணியாய்ப் பதிகிறது. இதில் அடிக்க மறந்த ஆணிகள் சிலவற்றை 'கழிவு' கதையில் அடித்துக் கடமை முடிக்கிறார். செருப்பை மாற்றி அணிந்து கொண்ட நகைப்பில் தொடங்கிக் கரடுமுரடான தனியார்மய எதிர்ப்பைக் குத்திக் கதை செய்திருக்கும் இவரின் எழுத்தாணி பிரமிப்பானது. அந்த 'மாற்றங்கள்' கதையின் அரசு அதிகாரி யார் என்றும் நமக்குத் தெரிந்துதான் விடுகிறது.


தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்காகக் கூட்டமாக விமானம் ஏறும் நாட்களில் விமானங்களில் வழங்கப்படும் உணவு வழக்கமானதாக இல்லாமல் சாதாரணமானதாக இருக்கும் என்கிற சர்வதேச அவலத்தைப் போகிற போக்கில் குத்திச் சொல்கிறது 'திரும்புதல்' கதை. மருந்துப் பொட்டலங்களோடு வாழப்பழகிவிட்ட இன்றைய சூழல் குறித்த குத்தலோடு "பொட்டலங்கள்' கதை. சுடுகாடுகள் அழிந்து மின் மயானங்கள் வந்து விட்டன, ஆனால் சாகிறவர்களும் சாகிற காரணங்களும் மாறவில்லை என்றொரு ஆணி 'மயானம்' கதையில்.


ஒரு மனப் பிறழ்ச்சியாளரின் ஓலைக் கீற்று வழியான பார்வையும் அவர் மீதான புறப்பார்வைகளும் 'ஒலைக்கீற்று' கதையையும் தாண்டிக் குத்துகின்றன மனதில். நாகரீகம் வளர்கிறதா வீங்கி நாறுகிறதா என்றொரு குத்தல் 'வெளுப்பு'வில் உறவுகளை உதறிக்கொண்டு தனித்தனி மனிதச் சில்லுகளாகச் சிதறிவிட்ட இன்றைய நடப்பைக் குத்துகிறது 'முன்பதிவு'.


'நீலப்படமும் சுசித்ராவும்' கதையில் தன் சிநேகிதியை நீலப்படத்தில் பார்க்க நேரும் யதார்த்தம் பயங்கரக் குத்தல். மேல்தட்டுக் கலாச்சாரத்தின் விகாரம், 'சூடு' கதையில் குத்தித் துருத்துகிறது. பிழைப்புச் செய்து வந்த தறிகளையே கட்டைகளாக உடைத்து விற்றுப் பிழைக்கும் நெசவாளிகளைப் பேசும் 'சாம்பல்' - அடிப்படையறிந்து வளராத விஞ்ஞானத்திற் கெதிரான குத்து.


சமூக ஏற்ற தாழ்வுகள் கழிப்பறைகளிலிருந்தே தொடங்குவதைக் குத்திக் காட்டிச் சொல்கிறது 'கழிப்பறைகள்' எனும் கதையாணி. இளம் விதவையொருத்தியின் நகர மறுக்கும் வாழ்க்கையின் நடுவே நம்பிக்கை அச்சாணியாகக் குத்தி நின்று இயக்கம் கொடுக்கிறது 'பாதுகாப்புகள்' சிறுகதை.


தொட்டு விட்டால் பிறகு விட்டுவிட முடியாத ஒரு 'தொடுப்பு'க்கு நம்மை ஆளாக்குகிறது இத்தொகுப்பு. ஆர்பிஎஸ் அவர்களின் எதிரே உட்கார்ந்து கதை பேசுவது மாதிரியான எழுத்துப் பாணிக்கு நம் கண், செவி, மெய் என்று அத்தனையையும் ஆளாக்கிக் கொண்டு அசந்து உட்கார்ந்து விடுகிறோம், வேறெதையும் விடுத்து பாத்திரங்களின் மன ஓட்டங்களையே கதைப் பட்டங்களுக்கான நூலாக்கிச் சுண்டுவதில் இவருக்கு நிகர் அவரே.


இது இவரது 13 வது சிறுகதைத் தொகுப்பு எனும் நான்காம் பக்கத் தகவல், நம்மிடம் இருக்கும் இல்லாத இவரது ஏனைய தொகுப்புகள் குறித்த அக்கறையோடு நம்மை அலமாறிப் பக்கம் உந்தித் தள்ளுகிறது. அர்த்தமுள்ள அழகிய வடிவமும் கொடுத்து வெளியிட்டிருக்கும் காவ்யா பதிப்பகத்தாருக்கு தமிழுலக வாசகர்கள் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.


( 26-08-2008 அன்று திருப்பூரில் நடைபெற்ற சுப்ரபாரதிமணியனின் " ஓலைக்கீற்று " சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழாவில் குறும்பட இயக்குனர் தாண்டவக்கோன் பேசியது. நூலை பேராசிரியை முத்து சிதம்பரம் வெளியிட , சுதாமா கோபாலகிருஸ்ணன் பெற்றுக்கொண்டார். " ஓலைக்கீற்று " ரூ 50/ காவ்யா பதிப்பக வெளியீடு, சென்னை. இவ்விழாவில் இவ்வாண்டின் அரிமா குறும்பட விருதுகள் 8 குறும்படப்படைப்பாளிகளுக்கும் ( கருணா ,விஆர்பி மனோகர், ஆண்டோ, தாரகை, கோவை சதாசிவம்,புவனராஜன், சுபாஸ், குணவதிமைந்தன்) அரிமா சக்தி விருது 5 பெண் எழுத்தாளர்களுக்கும்( பேராசிரிகைகள் முத்து சிதம்பரம், பாக்கியமேரி, சுலோட்சனா, அருணாதேவி, அம்சா) வழங்கப்பட்டன. சேலம் ஆண்டோவின் " ஆதிவாசிகள் " என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. )


செய்தி: issundarakannan7@gmail.com